திரவுபதி அம்மன் கோவிலை திறக்க இந்து சமய அறநிலையத்துறையை அணுக வேண்டும் - வழக்கு தொடர்ந்தவருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
|திரவுபதி அம்மன் கோவிலை திறக்க கோவிலை திறப்பது குறித்து அறநிலையத்துறையை அணுகும்படி வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், குறிப்பிட்ட பிரிவினரை அனுமதிக்கவில்லை எனக் கூறி அங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த கோவிலுக்கு கடந்த 7-ந் தேதி 'சீல்' வைக்கப்பட்டது.
இதை எதிர்த்தும், கோவிலை திறக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதா சர்வேஷ் குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
கோவிலில் அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தீண்டாமை எதுவும் நடைபெறவில்லை. கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட பொதுமக்கள் இல்லாமல் கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டது.
ஆனால், தற்போது கோவிலில் தினசரி பூஜைகள் கூட செய்ய முடியவில்லை. எனவே, கோவிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி, பூஜைகளை செய்ய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ''கோவில் திருவிழாவில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், ஏற்பட்ட பிரச்சினையி ஒருவர் தாக்கப்பட்டார்.
அறநிலைய துறை கோவிலுக்கு தக்காரை நியமித்த போதும், அவரால் பொறுப்பேற்க முடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது'' என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், ''கோவிலில் நடந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அதனால், இந்த விவகாரத்தில் அறநிலையத்துறைத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலை திறப்பது குறித்து மனுதாரர் அறநிலையத்துறையை அணுக வேண்டும். அதேநேரம், மனுதாரரின் கோரிக்கையை அறநிலையத்துறை சட்டப்படி பரிசீலித்து தகுந்த முடிவினை எடுக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.