எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை விசாரிக்க போலீசாருக்கு இடைக்கால தடை -ஐகோர்ட்டு உத்தரவு
|எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை விசாரிக்க சேலம் போலீசாருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேட்புமனுவில் சில விவரங்களை மறைத்துள்ளார். அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் கோர்ட்டில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் கோர்ட்டு, இது குறித்து விசாரணை நடத்தவும், முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதன்படி, சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.
அவமதிப்பு மனு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டாம் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனால், இந்த உத்தரவை மீறி, தன்னுடைய இந்தியன் வங்கி கணக்கு விவரங்களையும், தான் படித்த கல்லூரியில் சில விவரங்களையும் சேலம் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராணி, சப்-இன்ஸ்பெக்டர் குணசேகர் ஆகியோர் சேகரிப்பதாக ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோர்ட்டு அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இதுகுறித்து போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார்.
விசாரணை கூடாது
இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் தங்கள் செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், விசாரணைக்கு தடை கேட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள பிரதான வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை விசாரிக்கக்கூடாது. இந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கிறேன். கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறேன்'' என்று உத்தரவிட்டார்.