'அங்கீகாரம் இல்லாமல் மருத்துவம் செய்வோர் மீது நடவடிக்கை' சுற்றறிக்கை வெளியிட டி.ஜி.பி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவு
|அங்கீகாரம் இல்லாமல் மாற்றுமுறை மருத்துவம் செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் பெரிய இளையராஜா உள்பட 61 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'நாங்கள் அக்குபஞ்சர், எலக்ட்ரோபதி, ஹிப்னோதெரபி, எக்னெதெரபி, யோகா என்று மாற்றுமுறை மருத்துவ சேவையை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம். இதற்காக சமுதாய மருத்துவ பணி சான்றிதழ் (சி.எம்.எஸ்.) என்ற 6 மாத டிப்ளமோ படிப்பை தேசிய மாற்றுமுறை மருத்துவ வாரியம் என்ற கல்வி நிறுவனத்தில் முடித்துள்ளோம். மருத்துவ சேவை வழங்க அனுபவம் உள்ள எங்களை தொழில் செய்ய இடையூறு செய்யக்கூடாது என்று போலீசாருக்கும், மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
அங்கீகாரம் இல்லை
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் எஸ்.ரவிச்சந்திரன், ''மனுதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட டாக்டர்கள் இல்லை. இவர்கள் மருத்துவ சட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படிக்கவில்லை. 6 மாதம் படித்ததாக கூறப்படும், தேசிய மாற்று முறை மருத்துவ வாரியமே அங்கீகாரம் பெறாத தனியார் அமைப்பு ஆகும். பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்க இவர்களை அனுமதிக்க முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்'' என்று வாதிட்டார்.
மிகப்பெரிய பேரழிவு
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் மாற்றுமுறை மருத்துவம் என்ற ஒரு மருத்துவம் உள்ளது. ஆனால், தகுதியானவர்களை மட்டுமே டாக்டர்களாக பணியாற்ற அனுமதிக்க முடியும்.
மனுதாரர்கள் படித்ததாக கூறப்படும் கல்வி நிறுவனமே அங்கீகாரம் இல்லாதவை என்று கூடுதல் அரசு பிளீடர் கூறினார். எனவே, தேசிய மாற்றுமுறை மருத்துவ வாரியம் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் விசாரிக்க வேண்டும். ஏதேனும் விதிமீறல் இருந்தால், சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6 மாத மருத்துவ படிப்பை படித்தவர்களை மருத்துவ சிகிச்சை வழங்க அனுமதித்தால், அது சமுதாயத்தில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திவிடும். அதனால் மனுதாரர்கள் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது.
சுற்றறிக்கை
எனவே, அங்கீகாரம் இல்லாதவர்கள் மாற்றுமுறை மருத்துவ தொழில் செய்கின்றனரா? என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மனுதாரர்கள் மாற்று முறை மருத்துவ சிகிச்சை அல்லது வேறு எந்த பெயரிலும் மருத்துவ சேவை வழங்குவது இல்லை என்பதையும் போலீசார் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.