மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என்ற உத்தரவு ரத்து -ஐகோர்ட்டு தீர்ப்பு
|தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை சென்னை ஐகோர்ட்டின் முதல் பெஞ்சு ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை,
டாஸ்மாக் மதுபான கடை அருகில் தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான பார்களை நடத்தும் உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் அறிவிப்பாணை வெளியிட்டது.
இந்த டெண்டர் அறிவிப்புகளில், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்று வற்புறுத்தப்படவில்லை எனக் கூறி, ஏற்கனவே பார் உரிமம் பெற்றவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, 2021-ம் ஆண்டு டெண்டர் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தார். மேலும், பார் நடத்த அனுமதி வழங்க டாஸ்மாக் நிறுவனத்துக்கே அதிகாரம் இல்லை. அதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி உத்தரவிட்டார்.
சாத்தியம் இல்லை
அதேசமயம், 2022-ம் ஆண்டு டெண்டரை எதிர்த்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு மற்றொரு தனி நீதிபதி, டெண்டரை ரத்து செய்ததுடன், புதிய டெண்டர் அறிவிப்பாணையை வெளியிடும்போது, நில உரிமையாளரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி உத்தரவிட்டார்.
இந்த இரு உத்தரவுகளை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
பார் உரிமம் கோரி விண்ணப்பிக்கும் அனைவரும் நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றுகளை பெற்று சமர்ப்பிப்பது சாத்தியமற்றது.
ரத்து செய்கிறோம்
தடையில்லா சான்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிகளை ஏற்றுக்கொண்டால், தற்போது பார் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே தொடர்ந்து டெண்டரில் பங்கேற்க முடியும்.
அதனால், டெண்டரை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம். டாஸ்மாக் உத்தரவை உறுதி செய்கிறோம். டெண்டர் காலம் முடிவடையும் நிலையில் உள்ளதால் புதிய டெண்டர் கோர டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அனுமதி அளிக்கிறோம். அதேசமயம், 6 மாதங்களில் டாஸ்மாக் பார்களை மூட நடவடிக்கை எடுக்கும்படி பிறப்பித்த தனி நீதிபதி உத்தரவையும், தடையில்லா சான்று கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்ற மற்றொரு தனி நீதிபதி உத்தரவையும் ரத்து செய்கிறோம்.
புதிதாக டெண்டர் கோர டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அனுமதி வழங்குகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.