< Back
மாநில செய்திகள்
அக்குபஞ்சர் படிப்பு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் நடத்தப்படுகிறதா?
மதுரை
மாநில செய்திகள்

அக்குபஞ்சர் படிப்பு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் நடத்தப்படுகிறதா?

தினத்தந்தி
|
29 April 2023 12:12 AM IST

அக்குபஞ்சர் படிப்பு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் நடத்தப்படுகிறதா? என அரசு உறுதி செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தமிழ்நாடு அனைத்து அக்குபஞ்சர் மற்றும் மாற்று முறை டாக்டர்கள் சங்க அறக்கட்டனை தலைவர் முகம்மது சபீர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், அலோபதிக்கு மாற்றாக நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம். எங்களை விசாரணை என்ற பெயரில் போலீசார் தொடர்ந்து தொந்தரவு செய்து வருகின்றனர். போலீசார் மற்றும் அலோபதி டாக்டர்கள் எங்களுக்கு எந்தவித இடையூறாகவும் இருக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஓமியோபதி மருத்துவ முறைகளை படித்தவர்கள் மட்டுமே அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்க முடியும். மற்றவர்கள் தகுதியான டாக்டர்கள் கிடையாது என்று தெரிவித்தார். விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

அக்குபஞ்சர் படிப்பு முழுநேரம் படிக்கக்கூடியதாகும். ஆனால் அந்த படிப்பை சான்றிதழ் படிப்பாக நடத்துகின்றனர். தன்னிச்சையாக மருத்துவம் பார்க்கும் வகையில் அக்குபஞ்சர் முறை இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இது ஒரு சிகிச்சை முறை மட்டுமே. இதை பதிவு பெற்ற டாக்டர்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும். அக்குபஞ்சர் மருத்துவத்தை முறைப்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை ஏற்படுத்தும்படி டெல்லி ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. அக்குபஞ்சர் மருத்துவ முறை அங்கீகரிக்கப்பட்டாலும், அதற்கென இதுவரை எந்தவித வழிகாட்டுதல்களும் இல்லை.

எனவே, டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின்படி அக்குபஞ்சர் மருத்துவத்தை முறைப்படுத்த குழு அமைத்து, அந்த குழுவின் பரிந்துரையை அரசு ஏற்கும் வரை பதிவுபெற்ற டாக்டர்களால் மட்டும் இந்த சிகிச்சையை அளிப்பதையும், தன்னிச்சையாக யாரும் கிளினிக் நடத்தவில்லை என்பதை அரசு தரப்பில் உறுதிப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மட்டும் அக்குபஞ்சர் மற்றும் மாற்றுமுறை படிப்புகள் நடத்தப்படுகின்றன என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்