பெரம்பலூர்
பெரம்பலூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
|பெரம்பலூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
மதுரை வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்த ராஜேஷ், ஸ்டாலின் ஆகியோரை கீரைத்துறை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கடுமையாக தாக்கியதையும், மேற்படி வக்கீல்கள் மீது பொய் வழக்கு போட்டதையும் கண்டிக்கும் வகையிலும், மதுரை வக்கீல் அலெக்சாண்டர் தேவநேசன் மீது மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸ் நிலைய போலீசார் பொய் வழக்கு போட்டதை கண்டிக்கும் வகையிலும் பெரம்பலூர் மாவட்ட பார் அசோசியேஷனை (குற்றவியல்) சோ்ந்த வக்கீல்கள் நேற்று ஒரு நாள் மட்டும் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் போக்சோ சட்டம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க தனியாக ஒரு சிறப்பு நீதிமன்றம் பெரம்பலூரில் நிறுவிட வலியுறுத்தியும், பெரம்பலூரில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்திற்கு சிறப்பு நீதிபதி ஒருவரை நியமனம் செய்ய வேண்டியும், பெரம்பலூரில் கூடுதல் சார்பு நீதிமன்றம் விரைவில் அமைத்திட ஆவண செய்ய வலியுறுத்தியும் நாளையும் (வெள்ளிக்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற பணிகளையும் புறக்கணிக்க அச்சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் நிர்வாக குழுவின் அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளனர்.