ராஜபாளையத்தில் தம்பதியினர் கழுத்தை நெரித்து கொலை ? - மர்ம நபர்கள் வெறிச்செயல்
|ராஜபாளையத்தில் தம்பதியினரை கழுத்தை நெரித்து கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்பலபுளி பஜார் பகுதியில் உள்ள தெற்கு வைத்திய நாதபுரம் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால்.( வயது75.) தனியார் நூற்பாலையில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தனது மனைவி குருபாக்கியம்(68) ஆகிய இருவரும் தனியாக வசித்து வந்தார்கள்.
இவரது மகன்கள் இருவரும் திருமணமாகி கோவையில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக கணவன் மனைவி இருவரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.
சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது இருவரும் தனித்தனி அறைகளில் சடலமாக கிடந்துள்ளனர். அவர்களின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதுகுறித்து உறவினர் ஜெயமணி கொடுத்த தகவலின் பேரில் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
இருவரின் வாய்ப்பகுதியில் ரத்தம் வடிந்ததாகவும். உடலிலும் காயங்கள் எதுவும் இல்லை என்பது இவர்கள் இருவரையும் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என கூறினார்கள். இறந்த தகவல் பரவியதும் சம்பவம் நடந்த வீட்டை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
வீட்டின் பல்வேறு இடங்களில் மிளகாய் தூள் சிதறி கிடந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்து டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், ஶ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இருவரின் இறப்பு சந்தேகத்திற்கு இடமாக இருப்பதால் முதற்கட்டமாக மோப்ப நாய் ராக்கி உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.