< Back
மாநில செய்திகள்
ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் தம்பதி கைது; பொதுமக்களிடம் ரூ.500 கோடி வசூல் செய்தது அம்பலம்
மாநில செய்திகள்

'ஹிஜாவு' நிதி நிறுவன மோசடி வழக்கில் தம்பதி கைது; பொதுமக்களிடம் ரூ.500 கோடி வசூல் செய்தது அம்பலம்

தினத்தந்தி
|
18 Jun 2023 4:00 AM IST

‘ஹிஜாவு’ நிதி நிறுவன மோசடி வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். விசாரணையில், ரூ.500 கோடிக்கு மேல் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தது அம்பலமாகியுள்ளது.

'ஹிஜாவு' நிதி நிறுவனம்

சென்னையை தலைமையிடமாக கொண்டு, 'ஹிஜாவு' என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனம் பொதுமக்களிடம் 15 சதவீதம் வட்டி தருவதாக கூறி ரூ.4,400 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து, இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இவர்களிடமிருந்து ரூ.3 லட்சத்து 34 ஆயிரம் ரொக்கப் பணம், 448 கிராம் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, ரூ.80 லட்சம் மதிப்புள்ள 8 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதுமட்டுமல்லாமல், 162 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.14 கோடியே 47 லட்சம் பணத்தை முடக்கி, ரூ.75 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகள் மற்றும் ரூ.90 கோடி மதிப்புள்ள 54 அசையும் சொத்துகள் ஆகியவற்றையும் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

துப்பு கொடுத்தால் சன்மானம்

இந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தின் இயக்குநரான அலெக்சாண்டர், முகவர்கள் உள்பட 15 முக்கிய நபர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, அவர்களை பற்றி துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்திருந்தனர். மேலும், தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் எனவும் கூறினர்.

இந்த நிலையில், இவ்வழக்கில் இயக்குநராக செயல்பட்ட சுஜாதா காந்தா மற்றும் அவரது கணவர் ஐ.சி.எப். ஊழியர் கோவிந்தராஜூலுவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதி, பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி சுமார் ரூ.500 கோடிக்கும் மேல் பணம் வசூல் செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

கைது

இவர்களிடமிருந்து சில முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், பல கோடி ரூபாய் வங்கி கணக்கை முடக்கி இருப்பதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட தம்பதியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், மோசடி செய்து வசூலித்த பணத்தில் எங்கெல்லாம் இவர்கள் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர் என்பது தொடர்பாக, அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்