கோயம்புத்தூர்
வைர மோதிரம் திருடிய தம்பதி கைது
|காந்திபுரத்தில் வேலை பார்த்த வீட்டில் வைர மோதிரம் திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
ரத்தினபுரி
கோவை காந்திபுரம் லட்சுமணன் நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் வின்னா ஸ்டெபி (வயது 34). இவர் உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சம் வைரம் பதித்த மோதிரம் மற்றும் தங்க சங்கிலியை தேடினார். ஆனால் அந்த நகைகள் இல்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் வின்னா ஸ்டெபி வீட்டில் பணிபுரிந்த மேகலா என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கோவை பி.என்.புதூர் அருகே லிங்கனூரில் வசிக்கும் மேகலா என்ற பரிமளா (33), அவருடைய கணவர் ஸ்ரீஹரி (36) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்ததில் மேகலா தனது கணவருடன் சேர்ந்து வைரம் பதித்த மோதிரம், தங்க சங்கிலியை திருடியது தெரியவந்தது. உடனே அந்த தம்பதியை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்.