தொழிற்கல்வி நிறுவனங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் - தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
|தொழிற்கல்வி நிறுவனங்களை வாக்கு எண்ணிக்கை மையமாக தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும் என ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை,
மதுரை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தேர்ந்தெடுத்ததை எதிர்த்து மாணவர் சங்க தலைவர் ராஜ் முகமது உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மதுரையில் முக்கிய கல்வி நிறுவனமான மருத்துவக் கல்லூரியை வாக்கு எண்ணிக்கை மையமாக பயன்படுத்துவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன், மருத்துவமனையின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் இந்த ஆண்டே வாக்கு எண்ணிக்கை மையத்தை மாற்ற உத்தரவிடுவது சாத்தியமானது அல்ல எனவும், எதிர்காலத்தில் மதுரை மருத்துவ கல்லூரி உள்பட தொழிற்கல்வி நிறுவனங்களை வாக்கு எண்ணிக்கை மையமாக தேர்வு செய்வதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும் எனவும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.