கள்ளச்சாராயம் விற்போர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|கள்ளச்சாராயம் விற்போர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்தவர்களில் இதுவரை 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மேலும் 58 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி கள்ளச்சாரயம் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவார்களை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை மற்றும் மதுவிலக்கு துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கள்ளச்சாராயத்தை தடுக்க மாவட்ட அளவில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மதுவிலக்கு குறித்து தகவலளிக்க 10581 என்ற எண் பயன்பாட்டில் உள்ளதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளின் வீடுகளில் வாட்ஸ்-அப் எண்களை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பாக செயல்படும் அதிகாரிகளை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் நியமிக்க வேண்டும். தொழிற்சாலைகளில் எரிசாராயம், மெத்தனால் பயன்பாட்டை கவனிக்க வேண்டும். மெத்தனாலை விஷச் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தாமல் இருப்பதை கண்காண்க்க வேண்டும். கள்ளச்சாராயம், போதைப்பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.