கள்ளச்சாராய விவகாரம் - 4 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு - வடக்கு மண்டல ஐஜி கண்ணன்
|இந்த விவகாரம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் விளக்கமளித்தார்.
மரக்காணம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் விளக்கமளித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது ,
தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷசாராயத்தை குடித்ததால் உயிரிழந்துள்ளனர்.
செங்கல்பட்டில் ஒரு ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 4 பேர் தலைமறைவாக உள்ளனர், அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆய்வாளர்கள், 2 உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.காவல் துறையின் மது விலக்கு வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.