சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது - நாளை வரை நடக்கிறது
|விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு நேற்று முன்தினம் அனுப்பிவைக்கப்பட்டன.
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 6-ந் தேதி தொடங்கி, 24-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன.
விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு நேற்று முன்தினம் அனுப்பிவைக்கப்பட்டன. தரவரிசை பட்டியலில் சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியுள்ளது. சிறப்பு பிரிவில் வரும் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள், தேசிய மாணவர் படை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளில் நாளை (வியாழக்கிழமை) வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. கல்லூரிகள் விண்ணப்பித்த சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளை இந்த 3 நாட்களுக்குள் கலந்தாய்வுக்கு அழைத்து இடங்களை ஒதுக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றன. அதன்படி, கல்லூரிகள் அவர்களை கலந்தாய்வுக்கு அழைத்து இடங்களை நிரப்பி வருகின்றன.
இதனைத்தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு அடுத்த மாதம் (ஜூன்) 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையிலும், 2-ம் கட்ட கலந்தாய்வு 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையிலும் அந்தந்த கல்லூரிகளில் நடத்தப்பட இருக்கிறது. இதில் இடங்களை தேர்வு செய்யும் மாணவ-மாணவிகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு ஜூலை மாதம் 3-ந் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.