கடலூர்
குறிஞ்சிப்பாடியில் பரபரப்பு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் திடீர் வெளிநடப்பு
|குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் திடீர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் கலையரசி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவஞான சுந்தரம், சதிஷ்குமார், துணைதலைவர் குணசுந்தரிசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மேலாளர் சுகுமாரன் உள்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-
ராஜபாண்டியன்(தி.மு.க.):- கடந்த 2½ ஆண்டுகளில் பொது நிதி எவ்வளவு வந்துள்ளது? எந்தெந்த வார்டுகளில் எவ்வளவு பணி நடந்துள்ளது? என்ற விவரம் வேண்டும். இதுபற்றி கடந்த கூட்டத்திலேயே கேட்டோம், ஆனால் இதுவரை பதில் வரவில்லை.
கஸ்தூரி செல்வராசு(பா.ம.க):- எனது பகுதியில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. குடிநீர் வினியோகம் செய்வதற்காக புதிதாக குழாய்கள் அமைக்கும் பணி பாதியிலேயே நிற்கிறது. அதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்போது கேட்டாலும் நிதி வரவில்லை என்று கூறுகிறீர்கள். மக்களிடம் பதில் கூற முடியவில்லை.
சதீஷ்குமார்(வட்டார வளர்ச்சி அதிகாரி):- குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பின்னர் கவுன்சிலர்கள் ராஜபாண்டியன், நட்ராஜ் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 12 பேர் எழுந்து நின்று பொதுநிதி இதுவரை எவ்வளவு வந்துள்ளது? எந்தெந்த கவுன்சிலர் வார்டுகளில் எவ்வளவு வேலை நடந்துள்ளது? என விவரத்தை சென்ற கூட்டத்திலேயே கேட்டோம். ஆனால் இதுவரை பதில் தரவில்லை. வார்டில் வளர்ச்சிப் பணிகள் ஏதும் நடைபெறாததால் பொதுமக்களிடம் எங்களால் பதில் கூறமுடியவில்லை. இதை கண்டித்து மன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்கிறோம் என கூறிவிட்டு வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின்னர் மொத்தமுள்ள 29 கவுன்சிலர்களில் அ.தி.மு.க., பா.ம.க. உள்பட 17 கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட வளர்ச்சி பணிக்காக 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.