அரியலூர்
ஆண்டிமடம் பகுதியில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
|ஆண்டிமடம் பகுதியில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் தலைவர் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது. இதில், துணை தலைவர் தேன்மொழி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும்போது கூறியதாவது:- ஆண்டிமடத்தில் பெண்களின் கல்வி மேம்படும் வகையில் அப்பகுதியில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். கூவத்தூரில் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு 12 ஏக்கர் மேய்ச்சல் நிலம் உள்ளது. எனவே இதற்கு பட்டா வழங்குவதுடன், பள்ளியை தரம் உயர்த்தி விளையாட்டு மைதானம், பள்ளி கட்டிடங்களை கட்டித்தர வேண்டும். பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் எத்தனை நபர்களுக்கு வீடு வழங்கப்பட்டது என்ற விவரம் தெரிவிக்க வேண்டும். மேலும், இதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் செயல்பாடு குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும். விளந்தை ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நல்ல நிலையில் உள்ளது. இருப்பினும் மோட்டார் பழுது காரணமாக 12 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாடின்றி உள்ளது. எனவே அந்த மோட்டாரை பழுது நீக்கி ேமல்நிைல நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பி பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி நடப்பதாக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, ஒன்றிய பெருந்தலைவர் அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றுவதாக தெரிவித்தார்.