திருவள்ளூர்
திருமழிசை பேரூராட்சி கூட்டத்துக்கு வராத தலைவர், துணை தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
|திருமழிசை பேரூராட்சி கூட்டத்துக்கு வராத தி.மு.க.வைச் சேர்ந்த தலைவர், துணை தலைவர் ஆகியோரை கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சியில் நேற்று பேரூராட்சி கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற இருந்தது. 15 வார்டுகள் கொண்ட பேரூராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க.வைச் சேர்ந்த 13 வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்தனர்.
ஆனால் தி.மு.க.வைச் சேர்ந்த பேரூராட்சி தலைவர் வடிவேலு, துணை தலைவர் மகாதேவன் ஆகியோர் கூட்டத்துக்கு வராததால் கூட்டம் தொடங்காமல் இருந்தது.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரியிடம் வார்டு உறுப்பினர்கள் கேட்டபோது, பேரூராட்சி தலைவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் அவரால் கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியவில்லை என அவர் கடிதம் அனுப்பியதாக தெரிவித்து அதனை கவுன்சிலர்கள் முன்பு அதிகாரி வாசித்து காண்பித்தார்.
இதனால் கூட்ட அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வார்டு உறுப்பினர்கள் துணை தலைவர் வரும் வரை கூட்ட அரங்கத்தை விட்டு வெளியே செல்ல மாட்டோம் எனக்கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மற்றொரு நாளில் கூட்டம் நடத்தப்படும் என கூறியதால் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு வார்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்கள் கூறியதாவது:-
திருமழிசை பேரூராட்சியில் வார்டு உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்படுகிறது. எந்தவித வளர்ச்சி பணிகளும் செய்ய முடியவில்லை. இதனால் மக்கள் மத்தியில் வார்டு உறுப்பினர்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே தலைவர் மற்றும் துணை தலைவரை கண்டித்து கூட்டத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பி வெளிநடப்பு செய்ய இருந்தோம்.
இதனை அறிந்து கொண்ட நகரமன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் இருவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தி.மு.க.வைச்சேர்ந்த பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கு எதிராக அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க.வைச் சேர்ந்த அனைத்து வார்டு உறுப்பினர்களும் ஒன்றாக சேர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.