புதுக்கோட்டை
அரிமளம் ஒன்றிய குழு தலைவருக்கு கார் வாங்கியதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு
|அரிமளம் ஒன்றிய குழு தலைவருக்கு கார் வாங்கியதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தில் கையெழுத்திடாமல் திரும்பி சென்றனர்.
அரிமளம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் மேகலாமுத்து தலைமையில் நடைபெற்றது. ஆணையர் அமுதவல்லி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் செலவின தீர்மானங்கள் 35 வாசிக்கப்பட்டன. அப்போது கவுன்சிலர்கள் எழுந்து ஒன்றிய குழு தலைவருக்கு புதிதாக கார் வாங்கியதற்கு எங்களிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை, ஒப்புதலும் பெறவில்லை. எனவே அந்த தீர்மானத்தில் நாங்கள் கையெழுத்திட முடியாது. ஊரக பகுதியில் ஊராட்சி ஒன்றியபகுதியில் உள்ள ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உள்ள கழிப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய நியமிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து சம்பளம் மற்றும் செலவினங்கள் வழங்க வேண்டும் என கூறி உள்ளீர்கள். அதற்கு யார் யாரை நியமித்து உள்ளீர்கள். அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என குறிப்பிடப்படவில்லை. மேலும் ஒன்றிய குழு உறுப்பினர்களாக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒன்றியத்தின் வரவு- செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. ஒன்றியத்திற்கு மத்திய, மாநில அரசுகள் எந்தெந்த திட்டத்தின் கீழ் நிதி வழங்குகிறது என்பது குறித்து ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி 7 கவுன்சிலர்கள் வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்து இட்டு தீர்மான புத்தகத்தில் கையெழுத்திட மறுத்து சென்று விட்டனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.