விருதுநகர்
பருத்தி கொள்முதல் நிலையம்
|அருப்புக்கோட்டையில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கொள்முதல் நிலையம்
அருப்புக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. கணேசன் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை, விவசாயத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைதுறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் ராம் பாண்டியன் பேசுகையில், அருப்புக்கோட்டை, பந்தல்குடி, காரியாபட்டி, ரெட்டியாபட்டி, திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி விவசாயம் அதிகமாக நடைபெற்று வருகிறது. எனவே அருப்புக்கோட்டையில் அரசு பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். அதேபோல எண்ணற்ற விவசாயிகளும் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றனர்.
கருவேல மரங்கள்
மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள வைப்பாறு நீர் வழித்தடத்தை சரி செய்து சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றார்.
இதையடுத்து மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், நரிக்குடியில் கடலை பயிறுக்கு அரசு கொள்முதல் நிலையம் ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.
மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்.டி.ஓ. விடம் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ. கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.