< Back
மாநில செய்திகள்
விற்பனை கூடத்துக்கு லாரி, டிராக்டர்களில் கொண்டு வரப்பட்ட பருத்திமூட்டைகள்
திருவாரூர்
மாநில செய்திகள்

விற்பனை கூடத்துக்கு லாரி, டிராக்டர்களில் கொண்டு வரப்பட்ட பருத்திமூட்டைகள்

தினத்தந்தி
|
3 July 2023 12:15 AM IST

நாளை(செவ்வாய்க்கிழமை) பருத்தி ஏலம் நடக்கிறது. இதனை முன்னிட்டு விற்பனை கூடத்துக்கு லாரி, டிராக்டர்களில் கொண்டு வரப்பட்ட வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன.

மழையால் பருத்தி பயிர்கள் பாதிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருத்தி சாகுபடி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கிலோ ரூ.110 வரை விலை போனதால், இந்த ஆண்டு பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இதனால் கடந்தாண்டை விட கூடுதல் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு பருத்தி சாகுபடி தொடங்கிய நாட்களில் இருந்து திருவாரூர் மாவட்டத்தில் அடிக்கடி மழை பெய்து வந்ததால் பருத்தி பயிர்கள் பாதிக்கப்பட்டது.

ஆனாலும் பருத்தி சாகுபடி நடைபெற்று, அறுவடை செய்யப்பட்டு கடந்த 3 வாரமாக அரசின் விற்பனை கூடங்கள் மூலம் பருத்தி ஏலம் விடப்பட்டு வருகிறது.

நாளை பருத்தி ஏலம்

திருவாரூர் அரசு விற்பனை கூடத்தில் முதல் வாரம் கிலோ ரூ. 70-க்கு ஏலம் எடுத்துக்கொள்ளப்பட்ட பருத்தி பஞ்சுகள், 2-வது வாரம் ரூ.64-க்கு ஏலம் எடுத்துக்கொள்ளப்பட்டது. 3-வது வாரத்தில் ரூ.48 முதல் ரூ. 58 வரை பருத்தி பஞ்சு ஏலம் போயின. 3-வது வாரத்தில் பருத்தி பஞ்சுகள் ஏலம் விடப்பட்டபோது மழை பெய்ததால் மூட்டைகள் தண்ணீரில் நனைந்தன. இதனால் பருத்தி மூட்டைகளின் எடையில் 2 கிலோ வரை எடை குறைக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் நஷ்டம் ஏற்பட்டது.

நாளை(செவ்வாய்க்கிழமை) திருவாரூர் அரசு விற்பனை கூடத்தில் பருத்தி பஞ்சு ஏலம் நடைபெற உள்ளது. ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அணிவகுத்து நின்ற வாகனங்கள்

இதையடுத்து பஞ்சு மூட்டைகளை நனையாமல் பாதுகாக்கும் வகையில் நேற்று விவசாயிகள் பருத்தி பஞ்சு மூட்டைகளை லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றிக்கொண்டு திருவாரூர் அரசு விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தனர். சாரைசாரையாக விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி பஞ்சு மூட்டை வாகனங்கள் திருவாரூர்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்து பருத்தி பஞ்சு மூட்டைகள் ஏற்றி வந்த வாகனங்களை அரசு விற்பனை கூட கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு உள்ள கிடங்குகளில் பருத்தி பஞ்சு மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்