திருப்பூர்
பருத்தி விளைச்சல் அதிகரிப்பால் விற்பனை விலை கடும் வீழ்ச்சி
|தாராபுரம் வட்டார பகுதியில் பருத்தி விளைச்சல் அதிகரிப்பால் விற்பனை விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தாராபுரம் வட்டார பகுதியில் பருத்தி விளைச்சல் அதிகரிப்பால் விற்பனை விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பருத்தி சாகுபடி
தாராபுரம் சுற்றுவட்டார பகுதியான வெள்ளை கவுண்டன் வலசு, கருப்பண வலசு, பெருச்சி பாளையம், வட்டமலை புதூர், சென்னாக்கல் பாளையம், ஊத்துப்பாளையம், தளவாய் பட்டினம், அலங்கியம், கோவிந்தாபுரம், சத்திரம் உள்ளிட்ட பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அனைத்து பகுதியிலும் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட பருத்தியை விவசாயிகள் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து வருகிறார்கள்.
அவ்வாறு விவசாயிகள் கொண்டு செல்லும் பருத்தி ஒரு குவிண்டால் (100 கிலோ எடை கொண்டது) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விலை ரூ.15,500 விற்பனையானது. தற்போது விலைகுறைந்து விட்டது.
இதுகுறித்து அலங்கியம் பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியம் கூறியதாவது:-
விவசாயிகள் கவலை
தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் தற்போது கோடைகால பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகை உள்ளது. ஒன்று சாதாரண பருத்தி. இவை ஆறு மாத விளைச்சலும், கோடைகாலப் பருத்தி 4 மாத கால விளைச்சல் விளைய கூடியது.
தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் 4 மாதம் விளைச்சல் கொண்ட கோடைகாலப் பருத்தி மட்டும் பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த பருத்தி நடவு செய்த நாள் முதல் பல்வேறு செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அதில் குறிப்பாக உரம் விலை அதிகரிப்பு, பூச்சிக்கொல்லி மருந்து, களை எடுப்பு நடவு கூலி என பல்வேறு செலவுகளால் சிக்கி தவித்து வருகிறது.
அத்துடன் கூலி ஆட்களுக்கு தினசரி 350 ரூபாய் விதம் ஏக்கர் ஒன்றுக்கு சராசரியாக 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியது. அவ்வாறு செலவு செய்து பருத்தி அறுவடை செய்யும் தருணத்தில் ஏக்கர் ஒன்றுக்கு 10 முதல் 12 குவிண்டால் வரை கிடைக்கிறது.
ஒரு குவிண்டால் ரூ. 9 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே அரசு கூடுதல் விலையை நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.