< Back
மாநில செய்திகள்
வயல்களில் தண்ணீர் தேங்கி பருத்தி செடிகள் நாசம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

வயல்களில் தண்ணீர் தேங்கி பருத்தி செடிகள் நாசம்

தினத்தந்தி
|
2 Sept 2022 8:31 PM IST

பரமக்குடி பகுதியில் தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி பருத்தி செடிகள் நாசம் அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பரமக்குடி,

பரமக்குடி பகுதியில் தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி பருத்தி செடிகள் நாசம் அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பருத்தி விவசாயம்

பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட் பட்டது வாலாங்குடி பஞ்சாயத்து. இங்குள்ள கண்டாக்குளம் கிராமத்தில் 120 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தற்போது பருத்தி விவசாயம் செய்துள்ளனர்.

அந்த பருத்தி நன்கு விளைந்து வரும் நிலையில் பரமக்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால் வயல்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் வயலுக்குள் இறங்கினால் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பருத்தி செடிகள் அழுகி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து நடப்பட்ட பருத்தி செடிகள் மழைநீர் தேங்கி கிடப்பதால் செடிகள் நாசமாகி வருவதை கண்டு விவசாயிகள் பெரும் கவலை அடைந்து உள்ளனர். எனவே கண்டாக்குளம் கிராமத்தில் பாலம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஒத்துழைப்பு

ஆனால் அந்த கோரிக்கை எந்தவித பயனும் இல்லாத நிலையில் உள்ளது என கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வாலாங்குடி ஊராட்சி தலைவர் தவமணி கூறுகையில், இந்த பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என கண்டாக்குளம் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் பஞ்சாயத்து நிர்வாகத்தில் சரியான ஒத்துழைப்பு இல்லாததால் பாலம் கட்ட முடியவில்லை. மேலும் இந்த பகுதி மக்களுக்கு தேவையான சாலை வசதி, தண்ணீர் வசதி கூட செய்து கொடுக்க முடியாத நிலை உள்ளது.

மனு

இது குறித்து கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்தால் தான் பஞ்சாயத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்