ராமநாதபுரம்
பருத்திக்கு கிலோ ரூ.125 விலை; விவசாயிகள் மகிழ்ச்சி
|ராமநாதபுரம் மாவட்ட வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு நன்கு விளைந்துள்ள பருத்தி ஒரு கிலோ ரூ.125 வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நல்ல லாபம் கிடைப்பதால் இனி நெல்லுக்கு பதிலாக பருத்தி விவசாயம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு நன்கு விளைந்துள்ள பருத்தி ஒரு கிலோ ரூ.125 வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நல்ல லாபம் கிடைப்பதால் இனி நெல்லுக்கு பதிலாக பருத்தி விவசாயம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்தநிலையில் வைகை அணையில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்காரணமாக அப்போதைய நிலையில் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்தது. இந்த நீரை பயன்படுத்தி நெல்விவசாயம் நன்றாக மேற்கொண்ட விவசாயிகள் அதனை அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் நெல் மற்றும் மிளகாய்க்கு அடுத்தபடியாக இந்த மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் முக்கிய பயிர் பருத்தி. இந்த ஆண்டு நீர்ஆதாரம் ஆரம்பத்தில் சிறப்பாக இருந்ததால் அதனை பயன்படுத்தி கொண்ட விவசாயிகள் பருத்தி விவசாய பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.
இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 500 எக்ேடர் பருத்தி பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 9 ஆயிரத்து 352 எக்ேடரில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு பருத்தி விவசாயம் விவசாயி களுக்கு எதிர்பாராத வகையில் நன்கு விளைந்து விலை போனதால் கைகொடுத்து உள்ளது.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஒரு கிலோ ரூ.35 வரை மட்டுமே விலை போனது. கடந்த ஆண்டு ரூ.55 வரைதான் விலை போனது. ஆனால், இந்த ஆண்டு பருத்தி விலை ரூ.100-ஐ தாண்டி தற்போது ரூ.125 வரை விலை போய் உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட வரலாற்றில் இதுதான் அதிக அளவிலான விலை என்று விவசாயத்துறையினர் தெரிவித்து உள்ளனர். அதிக விலை போய் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பருத்தி விவசாயம்
இதுகுறித்து பொன்னக்க னேரி விவசாயி மைக்கேல் கூறியதாவது:- நெல்லுக்கு அடுத்தபடியாக பருத்தி விவசாயம் செய்தோம். போதிய மழை பெய்ததால் இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட நல்ல விலை கிடைத்து உள்ளது. மாவட்டம் முழுவதும் பருத்தி விவசாயிகளுக்கு ஜாக்பாட் பரிசு விழுந்ததைபோல பருத்தி அதிக விலைக்கு போய் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளோம். பெரிய அளவில் பருத்தி விவசாயம் செய் து இருந்தவர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பருத்திக்கு நல்ல விலை கிடைத்து ள்ளதால் நெல் விவசாயிகள் பலர் இனி வரும் காலங்களில் நெல்லுக்கு மாற்றாக பருத்தியை பயிரிட முடிவு செய்துள்ளனர்.