ராமநாதபுரம்
பருத்திக்கு அதிக விலை; விவசாயிகள் மகிழ்ச்சி
|முதுகுளத்தூர் தாலுகா பகுதியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருத்திக்கு நல்ல விலை கிடைத்து ள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் தாலுகா பகுதியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருத்திக்கு நல்ல விலை கிடைத்து ள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மிளகாய்,பருத்தி விவசாயம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயத்தை விட பருத்தி மற்றும் மிளகாய் விவசாயம் தான் அதிகமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக முதுகுளத்தூர், சாயல்குடியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் மிளகாய் மற்றும் பருத்தி விவசாயத்தில் அதிகமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது பருத்தி மற்றும் மிளகாய் விவசாயம் சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தேரிருவேலி, மட்டியரேந்தல், செங்கமடை, கருமலூர், மல்லல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் பருத்தி விவசாயம் தீவிரமாக நடந்து வருகிறது.
பருத்தி அறுவடை செய்யும் சீசன் நடந்து வருவதால் செடிகளில் காய்த்துள்ள பருத்தி காய்களில் உள்ள பஞ்சு களை பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவ்வாறு பறிக்கப்பட்ட பருத்தியில் இருந்து பஞ்சுகளை தனியாக பிரித்தெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
விளைச்சல்
இதுகுறித்து செல்வநாயகபுரத்தை சேர்ந்த பெண் விவசாயிகள் சரசு, சித்திரவள்ளி ஆகியோர் கூறியதாவது:- ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் விவசாய நிலத்தில் பருத்தி செடிகளை நட தொடங்குவோம். மே முதல் ஜூன் மாதம் வரையிலும் பருத்தி செடிகளில் உள்ள பஞ்சுகளை அறுவடை செய்வோம். கடந்த ஆண்டு பருத்தி விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதுபோல் கொரோனாவால் கடந்த ஆண்டு பருத்தி விலையும் மிக குறைவு. ஒரு கிலோ ரூ. 50 மட்டுமே விலை போனது.
ஆனால் இந்த ஆண்டு பருத்தி விளைச்சலும் ஓரளவு உள்ளது. விலையும் நல்ல விலை கிடைத்து உள்ளது. ஒரு கிலோ பருத்தி தற்போது ரூ.105-ல் இருந்து ரூ.115 வரையிலும் விலை போகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பருத்தி விளைச்சல் நன்றாக உள்ளது.
ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் சற்று பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தற்போது குறைந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.