ஊழல் புகார் - போக்குவரத்து துணை ஆணையர் சஸ்பெண்ட்
|ஊழல் புகாரில் போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் போக்குவரத்து துறை ஆணையரக அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த ஆணையரக அலுவலகத்தில் இணை ஆணையரக மற்றும் துணை ஆணையரக அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் நடராஜன் தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர்களிடமிருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தியது. இதில் கணக்கில் வராத ரூ.35 லட்சம் ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து துறை துணை ஆணையர் நடராஜன் நெல்லைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நெல்லைக்கு மாற்றப்பட்ட நடராஜன் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.