காஞ்சிபுரம்
சொத்துவரி பெயர்மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பெண் அதிகாரி கைது
|காஞ்சீபுரம் மாநகராட்சியில் சொத்துவரி பெயர் மாற்றம் செய்வதற்காக லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மதுராந்தோட்டம் தெரு பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (வயது 60). இவர் அதே பகுதியில் தனது பெயரில் உள்ள 460 சதுர அடி நிலத்தை தனது மகன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்தார்.
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி மகன் பெயரில் மாற்றம் செய்வதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். நீண்ட நாட்களாக பெயர் மாற்றம் செய்யாமல் அலைக்கழித்ததால் மாநகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டர் ரேணுகாதேவியிடம் கேட்டபோது, ரூ.15 ஆயிரம் கொடுத்தால் பெயர் மாற்றம் செய்து தருவதாக தெரிவித்தார்.
ஆவணங்கள் சரியாக உள்ள நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தர் காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் கொடுப்பதாகவும், வேலை முடிந்த பிறகு மீதி ரூ.5 ஆயிரம் தருவதாக கூறுமாறு தெரிவித்தனர். அதன்படி நேற்று காலை ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை சுந்தரிடம் கொடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் கேட்ட ரேணுகாதேவியிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.
அதன்படி மநாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற சுந்தர், பில் கலெக்டர் ரேணுகாதேவிக்கு போன் செய்தபோது, ஆலடிதோப்பு பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால் அங்கு வருமாறு தெரிவித்தார்.
இதனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு அங்கு சென்று ரேணுகாதேவியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் நோட்டுகளை சுந்தர் கொடுத்தார்.
அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, கீதா தலைமையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரேணுகாதேவியை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் விசாரணை செய்தபோது, சொத்துவரி பெயர் மாற்றம் செய்வதற்காக லஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் ரேணுகாதேவியை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.