மதுரை
வெள்ளைக்கல் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு
|வெள்ளைக்கல் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் மாநகராட்சி கமிஷனர் பிரவீன்குமார் திடீர் ஆய்வு செய்தார்.
வெள்ளைக்கல் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் மாநகராட்சி கமிஷனர் பிரவீன்குமார் திடீர் ஆய்வு செய்தார்.
தரம் பிரிப்பு
மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் சேரும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வெள்ளைக்கல் குப்பை சேகரிக்கும் மையத்திற்கு தினந்தோறும் சுமார் 800 டன் குப்பைகள் கொண்டு சென்று தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சியின் நுண்ணுயிர் செயலாக்கம் உரக்கூடங்களில் மக்கும் குப்பைகள் மட்டும் தரம் பிரித்து வாங்கப்பட்டு அந்தந்த உரக்கூடங்களில் உரமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார், நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை பிரிக்கும் முறைகள், பணிபுரியும் பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், குப்பைகளை மறுசுழற்சி செய்யும் முறைகள் போன்றவை குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், உரம் தயாரிக்கும் இடத்தையும் பார்வையிட்டார்.
உத்தரவு
அப்போது அவர் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை அதிகளவில் சேரவிடாமல் காலதாமதமின்றி உடனுக்குடன் தரம் பிரித்து உரமாக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தலைமைப் பொறியாளர் ரூபன் சுரேஷ், நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவி கமிஷனர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர் ரமேஷ்பாபு, கவுன்சிலர் கருப்பசாமி, சுகாதார அலுவலர் விஜயகுமார் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.