தஞ்சாவூர்
மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் உண்ணாவிரதம்
|மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதம்
தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தஞ்சை மண்டல அளவிலான உண்ணாவிரதபோராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் மாநில துணைத்தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். துணைப் பொதுச்செயலாளர் பிரதான்பாபு, மாநில செயலாளர் மணிவண்ணன், மாநில ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோதண்டபாணி தொடங்கி வைத்தார். மாநிலப் பொருளாளர் சுவாமிநாதன் கோரிக்கைகளை முன்வைத்து விளக்கவுரையாற்றினார்.
போராட்டத்தில், நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல்கள், பதிவு உயர்வு மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும். அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். எல்லை விரிவாக்க பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
பதவி உயர்வு
நகர, மாநகர சுகாதார செவிலியர்களுக்கு பகுதி சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா கால ஊக்க ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் உள்ள நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.