< Back
மாநில செய்திகள்
அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை
கடலூர்
மாநில செய்திகள்

அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை

தினத்தந்தி
|
10 April 2023 7:27 PM GMT

கடலூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடந்தது. 1000 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் அனைத்து தனியார், அரசு ஆஸ்பத்திரிகளில் 2 நாட்கள் கொரோனா பாதுகாப்பு தடுப்பு ஒத்திகை நடத்த அறிவுறுத்தியது.

அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடந்தது. கடலூரில் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடந்தது. இதற்காக கொரோனா நோயாளி போல் ஒருவர் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

ஒத்திகை

அவரை பாதுகாப்பு கவச உடை அணிந்து டாக்டர் ஒருவர் பரிசோதனை செய்தார். அதாவது, அவருக்கு நோயின் தன்மை எப்படி உள்ளது. அவரை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கலாமா? அல்லது ஆஸ்பத்திரி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கலாமா? ஆக்சிஜன் படுக்கையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கலாமா? என்று பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து அவரை வீல் நாற்காலியில் வைத்து செவிலியர்கள் தள்ளிக்கொண்டு அவசர சிகிக்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஆக்சிஜன் கொடுத்து சிகிச்சை அளிப்பது போல் ஒத்திகை பார்க்கப்பட்டது.

1000 ஆக்சிஜன் படுக்கைகள்

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் நடராஜன், நிலைய மருத்துவ அலுவலர் பாலகுமார், தேசிய சுகாதார திட்ட அலுவலர் காரல் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். இந்த திடீர் ஒத்திகையை பார்த்த மற்ற நோயாளிகள், உண்மையிலேயே கொரோனா நோயாளி உயிருக்கு ஆபத்தாக இருக்கிறாரா? என்று பேசிக்கொண்டனர். அதன்பிறகு தான் அவர்களுக்கு இது பாதுகாப்பு ஒத்திகை என்று தெரிந்தது.

இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி உள்பட மாவட்டத்தில் உள்ள 10 அரசு ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கொரோனா பரவலை தடுக்க மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், 1000 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்