புதுக்கோட்டை
மீனவர் வலையில் சிக்கிய கூரல் மீன்கள்
|கோட்டைப்பட்டினத்தில் மீனவர் வலையில் சிக்கிய கூரல் மீன்கள் ரூ.6 லட்சத்திற்கு ஏலம் போனது.
விசைப்படகு
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
வழக்கம் போல் மீன்பிடித்துக் கொண்டு நேற்று காலை மீனவர்கள் கரைக்கு திரும்பினர். மீனவர் ஒருவர் வலையில் 4 பெரிய கூரல் மீன்கள் சிக்கி இருந்தன. அந்த 4 மீன்கள் 95 கிலோ எடை இருந்தது.
ரூ.6 லட்சத்திற்கு கூரல் மீன்கள் ஏலம்
இந்நிலையில் மீனவர் வலையில், கூரல் மீன்கள் சிக்கிய செய்தி அப்பகுதியில் பரவியது. இதனால் கூரல் மீன்களை வாங்க வியாபாரிகள் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தலத்திற்கு வந்தனர். தொடர்ந்து அங்கு பிடித்து வரப்பட்ட கூரல் மீன்கள் ஏலம் விடப்பட்டன.
ஏலத்தில் பல வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டிப்போட்டு ஏலம் கேட்டனர். முடிவில் கூரல் மீன்கள் ரூ.6 லட்சத்திற்கு விலை போனது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தையல் போட பயன்படுகிறது
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், கூரல் மீன்கள் பொதுவாக கரைப்பகுதியில் கிடைப்பது இல்லை. இந்த வகையான மீன்கள் ஆழ்கடல் பகுதிகளிலேயே அதிகமாக கிடைக்கும். என்றைக்காவது நமது கடல் பகுதியில் ஒரு சில கூரல் மீன்கள் சிக்குகின்றன. இந்த மீன்கள் பொதுவாக உணவுக்காக பயன்படுத்துவது மிகவும் குறைவு. இந்த மீன் இவ்வளவு விலை போக காரணம், இந்த மீனின் வயிற்று பகுதியில் ஒருவகையான குடல் போன்ற பகுதி காணப்படும். அதனை நெட்டி என்று அழைப்பார்கள். இந்த நெட்டியானது மருத்துவத்துறையில் பெரும் பங்காற்றுகிறதாக கூறப்படுகிறது. இதய அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளிக்கு தையல் போட பயன்படுத்தப்படும் நூல் இந்த நெட்டியில் இருந்து தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இதனை போதைப்பொருளாக பயன்படுத்துவதாகவும் சிலர் கூறுகின்றனர். அதனாலேயே இந்த நெட்டிக்கு அதிக விலை போகிறது என்று கூறினர்.