விழுப்புரம்
மாயமான ஆவணங்களின் நகல்கள் விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல்
|பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் மாயமான ஆவணங்களின் நகல்களை விழுப்புரம் கோர்ட்டில் சி.பி.சிஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். மீண்டும் விசாரணை 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை.
அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி இவ்வழக்கில் மாயமான ஆவணங்களின் நகல்களை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் தாக்கல் செய்தனர்.
மேலும் அரசு தரப்பு சாட்சிகளான ஜெய்சங்கர், ராமநாதன், ராஜேந்திரன், சரவணன் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த சாட்சியங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 9-ந் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.