புதுக்கோட்டை
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க வாகனம் சிறைபிடிப்பு
|கீரமங்கலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திலிருந்து பால் விற்பனை நிறுத்தப்பட்டதால் 50-க்கும் மேற்பட்ட டீக்கடைகள் மூடப்பட்டன. மேலும் பால் வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பால் கொள்முதல்
கீரமங்கலத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளூரில் பொதுமக்கள் மற்றும் டீக்கடைகளுக்கு விற்பனை செய்வதுடன் புதுக்கோட்டை ஆவினுக்கும் பால் அனுப்பி வருகின்றனர்.
கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 1,500 முதல் 2 ஆயிரம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
விற்பனை நிறுத்தம்
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பால் உற்பத்தி குறைவாக உள்ளதால் ஆவினுக்கு அனுப்பும் பால் அளவு குறைந்துள்ளது. மேலும் ஆவினுக்கு பால் வரத்து குறைந்து உள்ளதால் உள்ளூரில் 10 சதவீதத்திற்கு மேல் பால் விற்பனை செய்யக்கூடாது என்று அனைத்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிய நிலையில் கடந்த 10-ந் தேதி கீரமங்கலம் பால் கூட்டுறவு சங்கத்தில் உள்ளூர் விற்பனை நிறுத்தப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த முதுநிலை ஆய்வாளர் திருப்பதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உள்ளூரில் பால் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர். அதன்பிறகு ஆவினுக்கு பால் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.
பாதுகாப்பு கேட்டு கடிதம்
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு, கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு புதுக்கோட்டை பால்வள துணை பதிவாளர் ஜெயபாலன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் பால்வளத்துறை ஆணையர் ஆணைப்படி கூட்டுறவு பால் உற்பத்தியில் 10 சதவீதம் மட்டுமே உள்ளூர் விற்பனை செய்ய வேண்டும். ஆனால் கீரமங்கலத்தில் 44 சதவீதம் உள்ளூர் விற்பனை நடக்கிறது.
எனவே கீரமங்கலம் பகுதியில் உள்ள டீக்கடைகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் பால் விற்பனையை நிறுத்திவிட்டு ஆவினுக்கு பால் அனுப்ப வேண்டும். அதனால் பால் கொள்முதல் மற்றும் பணியாளர்கள், பால் வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
பால் வாகனம் சிறைபிடிப்பு
இதற்கிடையே நேற்று கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திலிருந்து டீக்கடைகளுக்கு பால் விற்பனை செய்யாததால் 50-க்கும் மேற்பட்ட டீக்கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு சென்ற டீக்கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆவினுக்கு பால் ஏற்றிச்செல்லும் வாகனத்தை சிறைபிடித்து உள்ளூரில் பால் விற்பனை செய்யும் வரை வாகனத்தை அனுப்ப முடியாது என்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆவின் துணை பதிவாளர் ஜெயபாலனிடம் தொலைபேசியில் பேசி டிசம்பர் வரை கடைகளுக்கு பால் விற்பனை செய்யவும், ஜனவரி மாதம் முதல் கூடுதல் பால் உற்பத்தி செய்து ஆவினுக்கு கூடுதலாக பால் அனுப்புவதாக கூறியதையடுத்து துணை பதிவாளர் உள்ளூர் கடைகளுக்கு விற்பனை செய்ய சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டு பால் வாகனம் விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.