சிவகங்கை
கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் போராட்டம்
|கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் உள்கட்டமைப்பு நிதி திட்டங்களின் கீழ் டிராக்டர், நெல் அறுக்கும் எந்திரம், கரும்பு வெட்டும் எந்திரம் உள்ளிட்ட ஏதாவது ஒரு உபகரணத்தை கட்டாயமாக வாங்க வேண்டும் என்று அதிகாரிகள் வற்புறுத்துவதை கண்டித்தும், சங்க வளாகத்தில் கண்டிப்பாக கிட்டங்கிகளை கட்ட வேண்டும் என்று வலியுறுத்துவதை கைவிட வலியுறுத்தியும் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் சிவகங்கையில் தொடர் விடுப்பு போராட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் ராதாகிருஷ்ணன், துணை தலைவர்கள் பாலசுப்பிரமணியன், பரமானந்தம், இணை செயலாளர்கள் ராமசாமி, காளீஸ்வரி மற்றும் நிர்வாகிகள் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களை பூட்டி சாவியை கூட்டுறவு இணை பதிவாளர் ஜினுவிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தினர்.
அதேபோல் ராமநாதபுரத்தில் எந்திரம் மற்றும் உபகரணங்களின் சாவியை ஒப்படைக்கும் போராட்டம் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் குஞ்சரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
துணை தலைவர்கள் திருமால், கோபால், இணை செயலாளர்கள் சாமியாண்டி, ரேவதி மற்றும் செய்தி தொடர்பாளர் பொற்செல்வன் உள்பட மாவட்டத்தில் உள்ள 132 கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் கலந்து கொண்டு சாவிகளை ஒப்படைத்தனர்.