குன்னூர் பஸ் விபத்து - உயிரிழந்த 9 பேரின் உடல்களுக்கு அமைச்சர் அஞ்சலி..!
|குன்னூர் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தினார்.
குன்னூர்,
தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று காலை பஸ்சில் 61 பேர் சுற்றுலா சென்றனர். அவர்கள், அங்குள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்துவிட்டு, நேற்று மாலை கோவைக்கு புறப்பட்டனர். மாலை 5.30 மணியளவில் ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் பஸ் வந்து கொண்டு இருந்தது.
மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் பஸ் திரும்பியபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து அந்த பஸ், சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், குன்னூர் சுற்றுலா பஸ் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் மருத்துவமனையில் லேசான காயங்களுடன் சிகிச்சை பெறுவோருக்கு அரசு அறிவித்த ரூ.50,000 காசோலையை அமைச்சர் வழங்கினார்.