கடலூர்
கடலூரில் சமையல் எண்ணெய் விலை உயர்வு
|தீபாவளி பண்டிகையையொட்டி கடலூரில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. ஒரு புறம் காய்கறிகள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் மளிகை பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாட செலவுக்கே கணக்கு பார்த்து, செலவழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால், அனைத்து விதமான பொருட்களின் விலையும் ஒரே நேரத்தில் உயர்ந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக பலகாரங்கள் செய்வதிலும், சமையலிலும் முக்கிய இடம் வகிக்கக்கூடிய எண்ணெய் விலையும் தற்போது உயர தொடங்கியுள்ளது. அதாவது கடந்த மாதம் ரூ.180 முதல் ரூ.230 வரை விற்பனையான ஒரு லிட்டர் கடலை எண்ணெய் தற்போது ரூ.190 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கவலையில் இல்லத்தரசிகள்
அதேபோல் ரூ.280 முதல் ரூ.340 வரை விற்பனையான நல்லெண்ணெய் ஒரு லிட்டர் ரூ.320 முதல் ரூ.400 வரையும், ரூ.83-க்கு விற்கப்பட்ட பாமாயில் ரூ.86-க்கும், ரூ.95 முதல் ரூ.105 வரை விற்பனையான சூரியகாந்தி எண்ணெய் ரூ.100 முதல் ரூ.110 வரைக்கும், தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.150 முதல் ரூ.200 வரைக்கும், வனஸ்பதி ரூ.100 முதல் ரூ.120 வரைக்கும், நெய் ஒரு லிட்டர் ரூ.650 முதல் ரூ.700 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 வாரங்கள் உள்ள நிலையில், தற்போதே எண்ணெய் விலை உயர தொடங்கி இருப்பது, இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.
மாற்றம் இருக்காது
இதுகுறித்து கடலூரை சேர்ந்த மளிகைக்கடைக்காரர் ஒருவர் கூறுகையில், கடந்த காலங்களை போல் எண்ணெய் விலை அதிகளவில் உயரவில்லை. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, தற்போது குறைந்த அளவு தான் விலை அதிகரித்துள்ளது. மக்களின் நலனை கருதி, எண்ணெய் விலையை பெருமளவில் உயர்த்தாமல் அரசு கட்டுக்குள் வைத்துள்ளது. தீபாவளி பண்டிகை நேரத்திலும் எண்ணெய் விலையில் பெரிதும் மாற்றம் இருக்காது என்றார்.