சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - வணிக சிலிண்டர் விலை ரூ.351 அதிகரிப்பு
|வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நேற்று முதல் ரூ.50 உயர்ந்துள்ளது. இதேபோல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் அதிகரித்து இருக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1-ந்தேதியில் விலை நிர்ணயிக்கப்பட்டு, புதிய விலை நடைமுறைக்கு கொண்டுவரப்படுகின்றன.
இவ்வாறாக சிலிண்டர் விலை நிர்ணயித்ததில் பெரும்பாலும் அதன் விலை அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது. தொடர்ந்து விலை உயர்ந்து, கடந்த ஆண்டு (2022) மே மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை (14.2 கிலோ கிராம்) ஆயிரம் ரூபாயை கடந்து, 1,018 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் உயர்ந்து, அதன் பின்னர் விலை மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. அதன்படி, ஒரு சிலிண்டர் 1,068 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கேற்ப நிர்ணயம் செய்து புதிய விலை அறிவித்து இருக்கிறது. அந்தவகையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் 1,068 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்ட ஒரு சிலிண்டர் விலை, 1,118 ரூபாய் 50 காசுக்கு இனி விற்பனை செய்யப்பட உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், சிலிண்டர் விலை மளமளவென உயர்ந்து இருப்பதை பார்க்க முடிகிறது. அதிலும் கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக விலை அதிகரித்து கொண்டே வருகிறது.
இதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.455 அதிகரித்திருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டில் இதே மார்ச் மாதத்தில் ஒரு சிலிண்டர் விலை 663 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமையல் சிலிண்டர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கொதித்து போய் இருக்கின்றனர்.
வீட்டு உபயோக சிலிண்டர் விலைதான் ஒரு பக்கம் அதிகரிக்கிறது என்றால், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் (19 கிலோ கிராம்) விலையோ ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது.
கடந்த ஜனவரி மாதம் விலை மாற்றம் இருந்த நிலையில், சிலிண்டருக்கு ரூ.25 அதிகரித்து, அப்போது ஒரு சிலிண்டர் ரூ.1,917-க்கு விற்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்தில் விலை மாற்றம் இல்லாமல் இருந்து, மீண்டும் தற்போது விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.351 அதிகரித்து, இனி ரூ.2 ஆயிரத்து 268-க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது. வணிக சிலிண்டர் விலை உயர்வால், டீக்கடை, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் எண்ணெய் பலகாரங்கள், உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.