திருவள்ளூர்
திருநின்றவூர் ஜெயா கல்லூரியில் பட்டமளிப்பு விழா - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்
|திருநின்றவூர் ஜெயா கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
சென்னை அடுத்த திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 26-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜெயா கல்விக் குழும அறக்கட்டளைத் தலைவர் அ.கனகராஜ் தலைமை தாங்கி உரையாற்றினார். கல்லூரி முதல்வர் குகன், துணை முதல்வர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் தெலுங்கானா மாநில கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன், தெற்கு ரெயில்வே மண்டல மேலாளர் தேஜ் பிரதாப் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கலை பிரிவு மாணவர்கள் 800 பேருக்கும் அறிவியல் பிரிவு மாணவர்கள் 700 பேருக்கும் என மொத்தம் 1,500 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர். இதில் பல்கலைக்கழக அளவில் தரவரிசை அடிப்படையில் பதக்கம் பெற்ற 25 மாணவர்களுக்கு விழாவில் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, 'மாணவ- மாணவிகளாகிய நீங்கள் உங்கள் பெற்றோர்களால் தான் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். உங்களை இன்றைக்கு கல்வியாளர்களாக பட்டதாரிகளாக மாற்றி இருக்கிறார்கள் என்றால் முதல் நன்றியை உங்கள் பெற்றோர்களுக்கு சொல்ல வேண்டும். இரண்டாவதாக உங்களை பட்டம் பெறுவதற்கு வழிகாட்டிகளாக இருந்த உங்கள் ஆசிரியர் பெருமக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எங்கெல்லாம் படிப்பு சொல்லித் தரப்படுகிறதோ கல்வி ஊக்கப்படுத்தப்படுகிறதோ அதுதான் நாட்டிற்கு மிகப் பெரிய தூணாக இருக்கும் என கூறினார்.
விழாவில் கல்லூரி அறக்கட்டளை செயலாளர் விஜயகுமாரி, துணை செயலாளர் டாக்டர் தீனா, துணைத் தலைவர் என்ஜீனியர் நவராஜ், பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.