தர்மபுரி
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாஅமைச்சர் மா.சுப்பிரமணியன் 101 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்
|தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 101 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பட்டம் வழங்கினார்.
பட்டமளிப்பு விழா
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் ஒருங்கிணைந்த ஹீமோபிலியா மற்றும் ஹீமோகுளோபினோபதி பராமரிப்பு மைய கட்டிட திறப்பு விழா, 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்ட அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு மருத்துவக்கல்லூரியின் 10-வது பட்டமளிப்பு விழா நேற்று மாலை கல்லூரி கலை அரங்கில் நடந்தது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அமுதவல்லி வரவேற்றார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரூ.75 லட்சத்தில் ஒருங்கிணைந்த ஹீமோபிலியா மற்றும் ஹீமோகுளோபினோபதி பராமரிப்பு மைய கட்டிடத்தை திறந்து வைத்து ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டிடம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த 101 மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.
விழாவில் அமைச்சர் பேசியதாவது:
நோய் பாதிப்பு
தமிழகத்தில் மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு ஹீமோபிலியா மற்றும் ஹீமோகுளோபினோபதி என்ற நோய் உள்ளது. குறிப்பாக, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மலைவாழ் மக்களுக்கு இந்த நோய் உள்ளது. 13 மாவட்டங்களில் மலைகிராமங்களை சேர்ந்த 32 ஆயிரத்து 225 கர்ப்பிணிகளிடம் பரிசோதனை செய்ததில், 2 ஆயிரத்து 165 கர்ப்பிணிகளுக்கு இந்நோய் இருப்பது தெரியவந்துள்ளது. அதுபோல் 26 ஆயிரத்து 978 பள்ளி குழந்தைகளிடம் பரிசோதனை செய்ததில், 2 ஆயிரத்து 297 பள்ளி மாணவர்களுக்கு இந்நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது திறக்கப்பட்டுள்ள மையம், தமிழகத்திலேயே அரசு மருத்துவமனைகளில் முதல் மையம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவமனையில் தான் ஆண்டுதோறும் அதிக அளவிலான மகப்பேறுகள் நடக்கிறது. தர்மபுரி மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்ட மக்கள் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அரசு மருத்துவக் கல்லூரியின் சிறப்பான நிர்வாகமும் தான் இதற்கு காரணம்.
மருத்துவக்கல்லூரிகள்
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் 10-வது பட்டமளிப்பு விழா நடந்துள்ளது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களிலும் புதிய கல்லூரிகளை நிறுவ மத்திய அரசிடம் தமிழக முதல்-அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தர்மபுரி மாவட்ட மக்களுக்கு மேம்பட்ட மருத்துவ சேவைகள் கிடைக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் தொடர்ந்து பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி, மருத்துவ கண்காணிப்பாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் சாந்தி நன்றி கூறினார்.