< Back
மாநில செய்திகள்
மண் அள்ளியதை வீடியோ எடுத்ததால் தகராறு; 2 பேருக்கு அரிவாள் வெட்டு
திருச்சி
மாநில செய்திகள்

மண் அள்ளியதை வீடியோ எடுத்ததால் தகராறு; 2 பேருக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
25 Sept 2023 1:05 AM IST

மண் அள்ளியதை வீடியோ எடுத்ததால் தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

மணிகண்டம்:

வீடியோ எடுத்தார்

மணிகண்டம் அருகே உள்ள சூரக்குடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி சகாயமேரி (வயது 43). இவர் நேற்று காலை அவரது வீட்டின் அருகே உள்ள குப்பைமேட்டில் குவித்து வைத்திருந்த குப்பைகளை பொக்லைன் எந்திரத்தின் மூலம் டிராக்டரில் அள்ளி விவசாய நிலத்திற்கு கொண்டு சென்றார். பின்னர் குப்பை குவித்து வைத்திருந்த இடத்தை ஆழப்படுத்துவதற்காக பொக்லைன் எந்திரத்தின் மூலம் குழி தோண்டி அதில் இருந்த மண்ணை டிராக்டர் மூலம் அள்ளிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த இடத்திற்கு வந்த அதே ஊரை சேர்ந்த கணபதி (40) என்பவர், குப்பைக்குழியில் இருந்து மண் அள்ளி டிராக்டரில் ஏற்றியதை அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த சகாயமேரி, ஏன் வீடியோ எடுக்கிறாய் என்று சத்தம் போட்டுள்ளார். அப்போது 2 பேருக்கும் ஏற்பட்ட வாய் தகராறின்போது, கணபதி சகாயமேரியை தாக்கி சேலையைப் பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அரிவாள் வெட்டு

அதைப் பார்த்த சகாயமேரியின் உறவினர்கள் செங்கோல்ராஜ்(38), ஜேசுராஜ்(39) ஆகியோர் கணபதியை தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த கணபதி வேகமாக சென்று அவரது வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து செங்கோல்ராஜ், ேஜசுராஜ் ஆகியோரை வெட்டினார். இதில் அவர்கள் பலத்த காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து செங்கோல்ராஜ், ஜேசுராஜ், சகாயமேரி ஆகிய 3 பேரையும், உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதேபோல் சகாயமேரி தரப்பினர் தன்னை தாக்கியதாகவும், அதனால் காயமடைந்ததாகவும் கூறி கணபதி, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அதுகுறித்த புகாரின் பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்