கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய கவிதை: உதவி இயக்குனருக்கு நிபந்தனை முன்ஜாமீன்
|கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய கவிதை: உதவி இயக்குனருக்கு நிபந்தனை முன்ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கடந்த மாதம் 30-ந்தேதி சென்னையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், 'மலக்குழி மரணம்' என்ற தலைப்பில் திரைப்பட உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி கவிதை ஒன்றை வாசித்தார்.
இந்த கவிதையில் உள்ள வசனங்கள் இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாக கூறி சென்னை அபிராமபுரம் போலீசில் இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், கவிதை வாசித்த பி.விக்னேஷ்வரன் என்கிற விடுதலை சிகப்பி மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில், விடுதலை சிகப்பி மனுத்தாக்கல் செய்தார். அதில், 'கடவுள்களை அவமதிக்கும் வகையில் எதையும் பேசவில்லை. அரசியல் பழிவாங்கும் நோக்குடன் கொடுக்கப்பட்டுள்ள பொய் புகாரின் அடிப்படையில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.ஜி.திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் மனுதாரரிடம் விசாரணை நடத்த வேண்டியதுள்ளது என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, நிபந்தனைகளுடன் விடுதலை சிகப்பிக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.