ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன: சீமான் குற்றச்சாட்டு
|2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
சென்னை,
தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் உருவான திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடித்து உள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் இந்த படம் திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது.
இதில், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன. பாதுகாப்பு காரணங்களுக்காக தென் தமிழகத்தில் இந்த படம் திரையிடப்படவில்லை. இந்த திரைப்படத்திற்கு தடை கோரி சென்னையில் பல இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்க இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் இன்று பேசும்போது, மதம் இருந்தால் போதும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள் என குற்றச்சாட்டாக கூறினார்.
தொடர்ந்து அவர், ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் வெளிவந்து உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.