விருதுநகர்
சிவகாசி நகருக்குள் ஆம்னி பஸ்கள், லாரிகள் வந்து செல்ல கட்டுப்பாடு
|தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசி நகருக்குள் ஆம்னி பஸ்கள் மற்றும் லாரிகள் வந்து செல்ல துணை போலீஸ் சூப்பிரண்டு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
சிவகாசி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீபாவளிக்கு பண்டிகைக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பட்டாசுகளை வாங்க வெளியூர்களில் இருந்து வாடிக்கையாளர்கள் அதிக அளவில் சிவகாசிக்கு வந்த செல்கிறார்கள்.
இதனால் நகரில் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி அவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகாசி நகருக்குள் பிற்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை தினமும் 4 மணி நேரம் மட்டும் கனரக வாகனங்கள் வர அனுமதி வழங்கப்படும். அவசர சரக்கு கொண்டு வரும் வாகனங்கள் திருத்தங்கலில் உள்ள புதிய பஸ் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒருவழிப்பாதை
சாத்தூர் வழியாக வரும் வாகனங்கள் விஸ்வநத்தம் மீன் மார்க்கெட் பகுதியில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். பகல் நேரங்களில் சரக்கு வாகனங்கள் நகரில் எந்த பகுதியிலும் நிறுத்தக்கூடாது. பஸ் நிலையத்தை ஒட்டி உள்ள காந்தி ரோடு ஒருவழிப்பாதையாக செயல்படும். சிவகாசியில் இருந்து புறப்படும் ஆம்னி வாகனங்களும், பல்வேறு ஊர்களில் இருந்து சிவகாசி வழியாக இயக்கப்படும் ஆம்னி வாகனங்களும் இந்து நாடார் பெண்கள் பள்ளி கமிட்டிக்கு சொந்தமான சர்க்கஸ் மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.
சாத்தூர் ரோட்டில் தற்போது கட்டப்பட்டு வரும் புதிய மாநகராட்சி அலுவலக கட்டிடம் முதல் பஸ் நிலையம் வரை உள்ள பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.