நாகப்பட்டினம்
மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் சாவு
|வேளாங்கண்ணியில் திருமணமான 3 மாதத்தில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணியில் திருமணமான 3 மாதத்தில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒப்பந்த பணியாளர்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் வானவன்மாதேவி பகுதியை சேர்ந்தவர் தனபால். இவருடைய மகன் தமிழ்ச்செல்வம் (வயது33). இவருடைய மனைவி தேவிகா(27). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சியில் ஒப்பந்த மின் பணியாளராக பணி புரிந்து வந்த தமிழ்ச்செல்வம், நேற்று முன்தினம் மாலை வேளாங்கண்ணி செட்டிதெருவில் உள்ள ஒரு மின் கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்தார்.
மின்சாரம் தாக்கி சாவு
அப்போது திடீரென தமிழ்ச்செல்வத்தை மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தமிழ்ச்செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தமிழ்ச்செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமான 3 மாதத்தில் சோகம்
திருமணமான 3 மாதத்தில் மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.