கள்ளக்குறிச்சி
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடர் மழை: தென்பெண்ணை, மணிமுக்தா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு
|விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால், தென்பெண்ணை மற்றும் மணிமுக்தா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இந்த மழை நேற்றும் நீடித்தது. இதனால் நேற்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மின்கம்பங்கள் சாய்ந்தன
கனமழை பெய்த நிலையில், விழுப்புரம் அருகே வளவனூரில் இருந்து சிறுவந்தாடு குடியிருப்பு பகுதி வழியாக செல்லும் சாலையில் 4 உயர் அழுத்த மின் கம்பங்கள் நேற்று அதிகாலை 2 மணியளவில் சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதேபோல் விழுப்புரம் வண்டிமேடு வடிவேல் நகர் பகுதியில் நள்ளிரவு பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது உயர் அழுத்த மின் கம்பங்களில் இருந்து மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. இதில் 3 வீடுகளின் ஓடுகள் மீது மின்கம்பிகள் விழுந்ததால் ஓடுகள் உடைந்ததோடு அவ்வீடுகளில் பயன்படுத்திய மின்சாதன பொருட்கள் அதிக சத்தத்துடன் வெடித்து சேதமடைந்தது.
வெள்ளப்பெருக்கு
இதனிடையே தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை அதன் முழு கொள்ளளவான 119 அடியில் 117 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர், தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் வழியாக வரும் தென்பெண்ணையாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் வினாடிக்கு நேற்று காலை வினாடிக்கு 13 ஆயிரத்து 900 கனஅடி நீர் சென்ற நிலையில், மாலையில் நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
தரைப்பாலங்கள் மூழ்கின
இதேபோன்று, தென்பெண்ணையாற்றின் கிளை ஆறுகளான மலட்டாறு, பம்பை, நரியாறு உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில், குறிப்பாக மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் விழுப்புரம் அருகே பில்லூர்- சேர்ந்தனூர், எஸ்.மேட்டுப்பாளையம்- பரசுரெட்டிப்பாளையம், திருக்கோவிலூர் - அரகண்டநல்லூர் இடையே உள்ள தரைப்பாலங்கள் மூழ்கியதால், அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலூரில் கனமழை
தொடர் மழையால், கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணிமுக்தா அணையில் இருந்து நேற்று 2-வது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டதால், மணிமுக்தா ஆற்றில் நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருந்தது.
திருக்கோவிலூர் பகுதியில் மதியம் பெய்த மழையால் நகர சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. திருக்கோவிலூர் பஸ் நிலையம் வழியாக செல்லும் சித்தேரியன் வாய்க்கால் ஆக்கிரமிப்பு காரணமாக மழை நீர் வெளியேற முடியாமல் சாக்கடை நீருடன் கலந்து திருக்கோவிலூர் ஐந்துமுனை சந்திப்பு பகுதி வெள்ளக்காடானது.
மேலும் இந்த நீரானது அருகே உள்ள கூட்டுறவு சங்க கட்டிட வளாகத்திற்குள் புகுந்தது. இதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கயிறு கட்டி நடந்து சென்ற மக்கள்
கல்வராயன்மலை பகுதியில் பெய்த கன மழை காரணமாக பெரிய ஓடை வழியாக நெடுமானூர் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வயல்கள் மற்றும் குன்று மேட்டு தெரு, மாயவன் கோவில் தெருவுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி தெருக்களில் வசித்து வந்த 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கயிறு கட்டி வெள்ளத்தை கடந்து வெளியூர்களுக்கு சென்று வந்தனர்.
மேலும் அக்கிராம சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நெடுமானூர்- பொய்க்குணம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து தடைபட்டது.
இதுதவிர நெடுமானூர், சோழம்பட்டு கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், மரவள்ளி, சோளம், பருத்தி வயல்கள் தண்ணீரில் மூழ்கின.
இதே போன்று சங்கராபுரம் அருகே உள்ள கீழப்பட்டு மணிமுத்து ஓடை தரைப்பாலம் மூழ்கியதால் மேலப்பட்டு, குச்சிக்காடு, வளையம்பட்டு, பழையனூர் ஆகிய கிராம மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளுக்காக கள்ளக்குறிச்சி செல்ல முடியாமல் சுமார் 15 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.