தர்மபுரி
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
|தர்மபுரி மாவட்டம் முழுவதும் பெய்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது.
தர்மபுரி மாவட்டம் முழுவதும் பெய்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது.
தொடர்மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளதால் தமிழக முழுவதும் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழையும், மற்ற பகுதிகளில் சாரல் மழையும் பெய்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர். இதன் காரணமாக மாவட்ட முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. பணிக்கு சென்ற அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள் குடைகளை பிடித்தபடி சென்றனர். கல்லூரிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டது. ஆனால் போதுமான மாணவ, மாணவிகள் வராததால் பெரும்பாலான கல்லூரிகளில் ஒரு சில பாட வேலைகளில் மற்றும் வகுப்புகள் நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது.
வெறிச்சோடியது
இந்த தொடர் மழை காரணமாக தர்மபுரி டவுன், புறநகர் பஸ் நிலையங்கள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. வெளியூர்களுக்கு செல்லும் பெரும்பாலான பஸ்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. இதேபோன்று நகரில் உள்ள முக்கிய சாலைகளிலும் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. தர்மபுரி நகரில் அடிக்கடி விட்டுவிட்டு மழை பெய்ததால் அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் குடை பிடித்தபடி வழக்கமான பணிகளுக்கு சென்றனர். தர்மபுரி சேலம் பைபாஸ் ரோடு, தர்மபுரி கிருஷ்ணகிரி பைபாஸ் ரோடு மற்றும் பென்னாகரம் மெயின் ரோடு ஆகிய முக்கிய சாலைகளில் பெய்த சாரல் மழையால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
இதேபோன்று மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், பாலக்கோடு, ஏரியூர், நல்லம்பள்ளி, மொரப்பூர், அரூர், காரிமங்கலம், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கம்பைநல்லூர், மாரண்டஅள்ளி மற்றும் பாப்பாரப்பட்டி ஆகிய பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களிலும் நேற்று காலை முதல் இரவு வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.