< Back
மாநில செய்திகள்
தொடர் மழை: சென்னை வரும் 10 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
மாநில செய்திகள்

தொடர் மழை: சென்னை வரும் 10 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

தினத்தந்தி
|
19 Jun 2023 9:28 AM IST

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீடித்து வருகிறது.

சென்னை,

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சூறைகாற்றுடன் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, மீனம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, நூங்கம்பாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீடித்து வருகிறது.

இந்த நிலையில், தொடர்மழை காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கத்திப்பாரா மேம்பாலத்தில் கீழ் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை, வேப்பேரியில் சாலைகளின் இருபுறமும் மழைநீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை வரும் 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. அதன்படி துபை, தோகா, அபுதாபி, லண்டன், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. அதேவேளையில் கனமழையால் சென்னையில் இருந்து 17 பன்னாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டன. சென்னையில் நேற்று ஒரேநாளில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகள்