ஆபத்தான நிலையில் இருப்போருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
|ஆஸ்பத்திரிக்கு வர தயக்கம் காட்டியதால் இறப்புகள் அதிகம் சந்திக்க நேர்ந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
புதுச்சேரி,
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்திய விவகாரத்தில் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "மது அருந்தி நீண்ட நேரம் ஆனவர்கள் அவர்களது உடலுறுப்பு ஒவ்வொன்றாக செயலிழந்து வருகிறது என்று தெரிவதற்கு முன்னால் கூட ஆஸ்பத்திரிக்கு வர தயக்கம் காட்டியதால் இறப்புகள் அதிகம் சந்திக்க நேர்ந்தது. புதுச்சேரியை பொறுத்தவரை 8 பேர் ஓரளவு நலமுடனும், 8 பேர் ஆபத்தான நிலையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதில் இன்று (அதாவது நேற்று) காலை நோயாளியுடன் உடனிருந்தவருக்கு பாதிப்பு தென்பட்டு அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரும்கூட 2 நாட்களுக்குமுன்பு மது அருந்தியிருக்கிறார். அவர் வெளியில் சொல்லாமல் அதற்குரிய பாதிப்பு தென்பட்டவுடன் தற்போது அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். 9 பேர் அவசர சிகிச்சை வார்டிலும், 8 பேர் பொது வார்டிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலத்தில் 31 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.