சென்னையில் தொடர் கனமழை: வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்ட கார்கள்...!
|சென்னையில் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக நேற்று மாலை முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. சென்னையில் கிண்டி, வேளச்சேரி, வேளச்சேரி, துரைப்பாக்கம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், நாவலூர், பரங்கிமலை, எழும்பூர், மாம்பலம், மடிப்பாக்கம், பெரம்பூர், அண்ணாநகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், அரும்பாக்கம், தாம்பரம், நுங்கம்பாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
தொடர் கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னையில் அதிகாலை வரை சராசரியாக 34 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகனமழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இடைவிடாது பெய்யும் கனமழையால் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மழைநீர் புகுந்ததால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஒன்றன் பின் ஒன்றாக வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு குவியலாக ஒரு இடத்தில் தங்கி நின்றன.
அதைபோல சென்னை குன்றத்தூரில் அருகில் உள்ள வட்டக்குப்பட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்ட கார்கள் வரிசையாக வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன. இது தொடர்பான இரண்டு வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#Pallikaranai, Chennai
— sridevi sreedhar (@sridevisreedhar) December 4, 2023
Effect of #CycloneMichuang
Stay safe chennai!!#ChennaiRain
pic.twitter.com/5WyNs9gFB4