< Back
மாநில செய்திகள்
தொடர் மழை எதிரொலி:முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு:லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு
தேனி
மாநில செய்திகள்

தொடர் மழை எதிரொலி:முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு:லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு

தினத்தந்தி
|
9 Sept 2023 12:15 AM IST

தொடர் மழை காரணமாக, முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணை

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் நீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ளலாம். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

குறிப்பாக பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும், மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 8 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதன்படி, கடந்த 1-ந் தேதி முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 118.10 அடியாக இருந்தது. தொடர் மழையால் ஒரு வாரத்தில் அணையின் நீர்மட்டம் ஒரு அடி வரை உயர்ந்து உள்ளது.

நீர்மட்டம் உயர்வு

நேற்று காலை முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 590 கன அடியாக இருந்தது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 300 கன அடியில் இருந்து 400 கன அடியாக அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

முல்லைப்பெரியாறு அணை 20.6, தேக்கடி 14.6, கூடலூர் 3.4, உத்தமபாளையம் 2.6, சண்முகா நதி 2.4, போடி 5.6, வைகை அணை 1.4, சோத்துப்பாறை அணை 2, பெரியகுளம் 2, வீரபாண்டி 4.2 , அரண்மனை புதூர் 4.8, ஆண்டிப்பட்டி 4.2.

மின் உற்பத்தி அதிகரிப்பு

இதற்கிடையே அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக அங்கு 4 ஜெனரேட்டர்கள் உள்ளன. ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும்.

நேற்று முன்தினம் வரை அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஒரு ஜெனரேட்டரில் 27 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது நேற்று முதல் அணையில் இருந்து கூடுதலாக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒரு ஜெனரேட்டர் மூலம் 36 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்