அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர் சிகிச்சை.!
|அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அதிகமாக இருக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்க மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சென்னை,
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜிக்கு இதயவியல் பிரிவு தலைவர் மனோகரன் தலைமையிலான குழு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. செந்தில்பாலாஜிக்கு அதிகமாக இருக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்க மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்பான ரத்தப் பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில், எம்.ஆர்.ஐ ஸ்கேன் தற்போது எடுக்கப்பட உள்ளது. அனைத்து பரிசோதனை முடிவுகளும் கிடைத்த பிறகு சிகிச்சையை தொடர்வதா என்பதை மருத்துவ குழு முடிவு செய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.