< Back
மாநில செய்திகள்
தேனி பகுதியில் ஆட்டோக்களில் சவாரி செய்யும் பயணிகளிடம் தொடரும் வழிப்பறி; பொதுமக்கள் அச்சம்
தேனி
மாநில செய்திகள்

தேனி பகுதியில் ஆட்டோக்களில் சவாரி செய்யும் பயணிகளிடம் தொடரும் வழிப்பறி; பொதுமக்கள் அச்சம்

தினத்தந்தி
|
22 Oct 2023 3:00 AM IST

தேனி பகுதியில் ஆட்டோக்களில் சவாரி செய்யும் பயணிகளிடம் தொடரும் வழிப்பறியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தேனி பகுதியில் ஆட்டோக்களில் சவாரி செய்யும் பயணிகளிடம் தொடரும் வழிப்பறியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தொழிலாளி

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மெய்யனூத்துப்பட்டியை சேர்ந்தவர் சின்னக்கருப்பையா (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய உறவினர் ஒருவர் தேனி அருகே உப்பார்பட்டியில் வீடு கட்டி வருகிறார். அவருக்கு கொடுப்பதற்காக மற்றொரு உறவினர் ரூ.20 ஆயிரத்தை சின்னக்கருப்பையாவிடம் கொடுத்தார். அந்த பணத்தை கொடுப்பதற்காக அவர் கடந்த 18-ந்தேதி நள்ளிரவில் தேனிக்கு வந்தார்.

தேனி பழைய பஸ் நிலையத்தில் அவர் காத்திருந்த போது, அந்த வழியாக ஒரு ஆட்டோவை ஒரு வாலிபர் ஓட்டி வந்தார். அதற்குள் மேலும் ஒரு வாலிபர் இருந்தார். ஆட்டோவை ஓட்டி வந்த நபர், சின்னக்கருப்பையாவிடம் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டார். அவர் உப்பார்பட்டி செல்ல வேண்டும் என்ற விவரத்தை சொன்னதும் தனது ஆட்டோவில் அங்கு விடுவதாக கூறி அவரை ஏற்றிக் கொண்டார்.

பணம் பறிப்பு

தேனி-கம்பம் சாலையில் பழனிசெட்டிபட்டி தண்ணீர் தொட்டி அருகில் சென்றவுடன் முல்லைப்பெரியாறு தடுப்பணைக்கு செல்லும் சாலையில் ஆட்டோவை ஓட்டிச் சென்றார். அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, டிரைவரும் மற்றும் ஆட்டோவில் இருந்த மற்றொரு நபரும் சேர்ந்து சின்னக்கருப்பையாவை தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்து 470-ஐ பறித்துக் கொண்டு அவரை அங்கேயே விட்டுச் சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் சின்னக்கருப்பையா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கம்பம் சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

டிரைவர் கைது

விசாரணையில், இந்த வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் தேனி அல்லிநகரம் குறிஞ்சி நகரை சேர்ந்த பூமிநாதன் மகன் சூரியபிரகாஷ் (20) என்பதும், அவருடைய கூட்டாளி திண்டுக்கல்லை சேர்ந்த விஸ்வா என்பதும் தெரியவந்தது. இதில் சூரியபிரகாசை பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். விஸ்வாவை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் பெரியகுளம் போலீசாரிடம் பிடிபட்டுள்ளதாக தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர் சம்பவங்கள்

தேனி மாவட்டத்தில் ஆட்டோவில் பயணம் செய்யும் நபர்களிடம் ஆட்டோ டிரைவர்களே பணம், செல்போன் பறிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று ஆட்டோவில் பயணம் செய்த நபர்களிடம் ஆட்டோ டிரைவர்களே வழிப்பறி செய்த 2 சம்பவங்கள் நடந்தன. சில நாட்களுக்கு முன்பு பெரியகுளத்தில் இருந்து தேனி நோக்கி பெண் வனக்காவலரை ஆட்டோவில் கடத்த முயன்ற சம்பவத்தில் பாலியல் குற்றங்களில் தொடர்புடைய வாலிபர் ஒருவர் கைதாகினார்.

நள்ளிரவு நேரங்களில் இதுபோன்ற கடத்தல், பணம் பறிப்பு சம்பவங்கள் நடப்பதால் ஆட்டோக்களில் பயணம் செய்ய மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இயக்கப்படும் ஆட்டோக்களை தணிக்கை செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்களிடம் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் செய்திகள்